செய்திகள்
கோப்பு படம்

களியக்காவிளை பஸ் நிலையத்தில் பெண், குழந்தையிடம் 4 பவுன் நகை பறிப்பு

Published On 2019-11-19 12:31 GMT   |   Update On 2019-11-19 12:31 GMT
களியக்காவிளை பஸ் நிலையத்தில் பெண் மற்றும் குழந்தையிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

களியக்காவிளை எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 55).

இவர் நேற்று மதியம் களியக்காவிளையில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து படந்தாலு மூடு சென்றார். அங்கிருந்து பஸ்சில் அவர் களியக்காவிளை சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் களியக்காவிளை பஸ் நிலையம் வந்ததும் ராஜகுமாரி பஸ்சில் இருந்து முண்டியடித்து கீழே இறங்கினார்.

அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையறிந்த ராஜகுமாரி நகையை தான் வந்த பஸ்சில் தேடிப்பார்த்தார். மேலும் பஸ் நிலையத்திலும் தேடினார். ஆனால் நகை கிடைக்கவில்லை. அதன்பின்தான் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதேப்போல் பெற்றோருடன் பஸ் நிலையத்திற்கு எஸ்.டி.மங்காடு வாவறை பகுதியை சேர்ந்த சாஜினி என்ற 1½ வயது குழந்தை வந்திருந்தார். அவர்கள் பஸ்சுக்காக பஸ் நிலையத்தில் காத்து நின்றனர்.

அப்போது அவர்கள் ஊருக்கு செல்வதற்கான பஸ் வந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதில் 1½ வயது குழந்தையுடன் தாயார் ஏறினார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தையின் கையில் கிடந்த ½ பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். பஸ்சில் ஏறி பெற்றோர் குழந்தையின் கையில் கிடந்த நகை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த 2 சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் பஸ் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News