செய்திகள்
பீகார் வாலிபர்

வழிப்பறி கொள்ளையர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பீகார் வாலிபர் கைது

Published On 2019-11-19 10:39 GMT   |   Update On 2019-11-19 10:39 GMT
திருப்பூர் மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி நகை, பணம், செல்போன் பறிக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அவினாசி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

விசாரணையில் அவர்கள் பிரபல வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

6 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். பகலில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் அவர்கள் இரவு நேரங்களில் துப்பாக்கியை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மேலும் தீபாவளி பண்டிகையின் போது திருமுருகன் பூண்டி, அவினாசி பகுதிகளில் உள்ள வங்கிகளில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பெரிய அளவில் கொள்ளை அடிக்கும் திட்டம் தீட்டி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைதானவர்களிடம் துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பீகார் மாநிலம் முசாபபூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிக் (30) என்பவர் தான் தங்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்ததாக கூறினார்கள்.

இதனை தொடர்ந்து ஆசிக்கை கைது செய்ய திருப்பூர் தனிப்படையினர் பீகார் சென்றனர். அப்போது உள்ளூர் வழக்கில் ஆசிக் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

கோர்ட்டு அனுமதியின் பேரில் திருப்பூர் தனிப்படையினர் ஆசிக்கை காவலில் எடுத்து திருப்பூர் அழைத்து வந்தனர். இங்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அவர் வேறு யாருக்கெல்லாம் துப்பாக்கி சப்ளை செய்துள்ளார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News