செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் துணைக்கண்காணிப்பு குழு ஆய்வு

Published On 2019-11-19 09:08 GMT   |   Update On 2019-11-19 09:08 GMT
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழு இன்று ஆய்வு செய்தனர்.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் சார்பில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவிற்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழுவும் நியமிக்கப்பட்டனர்.

அதன் தலைவராக கொச்சி மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம்இர்வின், கேரள பிரதிநிதிகளாக அருண்ஜேக்கப், பிரசீது ஆகியோர் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 4-ந் தேதி அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக இருந்தபோது இக்குழுவினர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தொடர் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தற்போது பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1703 கன அடியாகவும், திறப்பு 1600 கன அடியாகவும் உள்ளது. 4363 மி.கன அடி நீர் உள்ளது.

இந்நிலையில் பெரியாறு அணைக்கு வந்த துணைக்குழு மெயின் அணை, பேபி அணை கேலரி, மதகு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம், நீர் கசிவு குறித்து ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வல்லக்கடவு பாதை, சீரமைப்பு, பேபி அணையை பலப்படுத்துதல் அணைக்கு மின் இணைப்பு கொண்டு வருவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News