செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் பணிமாறுதல் தண்டனை அல்ல- விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2019-11-19 07:46 GMT   |   Update On 2019-11-19 07:46 GMT
போராட்டம் நடத்திய மருத்துவர்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதை தண்டனையாக கருத முடியாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை: 

சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 600 பேருக்கு அடையாள அட்டையினை வழங்கினர். 

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏழை எளிய மக்களுக்கும் விலையில்லாமல் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை அம்மா தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு கோடியே 58 லட்சம் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் பெறக்கூடிய வழிவகையை தமிழக அரசு செய்துள்ளது.

குறிப்பாக உயர் அறுவை சிகிச்சை 25-ல் இருந்து 35 லட்சம் வரையும் காப்பீடு திட்டத்தை பயன்படுத்தும் வழிவகை இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. மேலும், 255 அரசு மருத்துவமனைகளிலும், 747 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி மருத்துவம் செய்து கொள்ளலாம்.



முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துரித நடவடிக்கையால் இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் கூடுதலாக பெற்றிருக்கிறோம்.

மேலும், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிக்காக விண்ணப் பித்துள்ளோம்.

மருத்துவத்துறை என்பது சேவைத்துறை. வெகு குறைந்த மருத்துவர்களை பணிமாறுதல் செய்தது தண்டனை அல்ல. பணியின்போது பணி செய்ய தடுத்த மருத்துவர்களை மட்டுமே பணி மாறுதல் செய்துள்ளோம். பணி மாறுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்ற நிர்வாக செயல்பாடுகள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நடராஜ், விருகை வி.என்.ரவி, முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், சென்னை கலெக்டர் சீதாலட்சுமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News