செய்திகள்
இரா.முத்தரசன்

ரஜினியின் கருத்துக்கள் அரசியலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது- இரா.முத்தரசன்

Published On 2019-11-19 05:46 GMT   |   Update On 2019-11-19 05:46 GMT
ரஜினியின் கருத்துக்கள் அரசியலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

தேனி:

தேனி அருகில் உள்ள வீரபாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாததால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மேலும் பல்வேறு ஊழல் முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன.

உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசிடம் வெளிப்படை தன்மை இல்லை. தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாநில தேர்தல் ஆணையரை அரசு திடீரென பணியிடம் மாற்றம் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு வார்டுகள் பிரிக்கப்படவில்லை. இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை.


இதற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்மந்தமில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறியிருப்பது ஏற்ககூடியது அல்ல. இந்த குளறுபடிகளுக்கு எதிராக யாராவது நீதிமன்றம் சென்றால் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் தேர்தலை நிறுத்தி விட்டது என அ.தி.மு.க. குறை கூறி தப்பித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் பாதுகாப்புத்துறை செயலராக பணியாற்றிய காலத்தில்தான் இலங்கை இறுதிப்போரில் அப்பாவி தமிழர்கள் ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். அவருக்கு அரசியல் பண்பாடு மற்றும் நாகரீகம் கருதி இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் இலங்கையில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்படுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழர்கள் தங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

ரஜினிகாந்த் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்களை ஊடகங்கள்தான் பெரிதாக வெளிப்படுத்தி வருகின்றன. அவரது எந்த கருத்துக்களும் அரசியலில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடாது. இந்திய அரசியலிலும், மாநில அரசியலிலும் வெற்றிடம் என்பது எப்போதும் ஏற்பட்டதே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News