செய்திகள்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு நீதிபதி பாக்கியராஜ் பரிசு வழங்கியபோது எடுத்த படம்.

பள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் ஒரு மணி நேரம் நூல்களை படிக்கவேண்டும் - நீதிபதி பாக்கியராஜ்

Published On 2019-11-18 17:55 GMT   |   Update On 2019-11-18 17:55 GMT
பள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் ஒரு மணி நேரம் நூல்களை படிக்க வேண்டும் என நீதிபதி பாக்கியராஜ் கூறினார்.
குளித்தலை:

குளித்தலையில் வாசகர் வட்டம் மற்றும் முழுநேர கிளை நூலகம் சார்பில் 52-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குளித்தலை ராமர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக குளித்தலை நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் கலந்து கொண்டு, தமிழக அரசு பொதுநூலக இயக்ககம் சார்பில் சிறந்த வாசகர் வட்ட விருது பெற்றதற்காக, குளித்தலை வாசகர் வட்ட நிர்வாகிகளையும், நூலகரையும் பாராட்டினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டின் எதிர்காலமான குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் நூல்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். பிள்ளைகளுக்கு வீட்டிலேயே படிக்கும் நல்ல சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்திதரவேண்டும். நம்நாட்டின் வரலாற்றை மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ளவேண்டும். நாள்தோறும் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். சிறுவயதுடைய சிலர் திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதை பார்க்கும்போது அவர்களது, பெற்றோர் மற்றும் சமூகத்தின் சூழ்நிலையும், சரியாக அவர்கள் வளர்க்கப்படாததுதான் காரணம் என்று தோன்றுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் 1 மணி நேரமாவது நூல்களை படிக்க வேண்டும். வாரம் ஒருமுறை நூலகத்திற்கு சென்று அங்குள்ள நூல்களையும் படிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியை முத்துலட்சுமிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் குளித்தலை பகுதியில் உள்ள அரசு, ஊராட்சி ஒன்றியம் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் குளித்தலை நூலக நூலகர் ஆனந்தகணேசன், வாசகர் வட்டத்தலைவர் கோபாலதேசிகன், துணைத்தலைவர் மனோகரன், வக்கீல் சங்கத்தலைவர் சாகுல்அமீது, அரசு வக்கீல் மனோகரன், அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News