செய்திகள்
சென்னை மாநகராட்சி

மக்கும் குப்பையில் தயாரித்த இயற்கை உரம் மால்களில் விற்பனை - சென்னை மாநகராட்சி ஏற்பாடு

Published On 2019-11-18 11:35 GMT   |   Update On 2019-11-18 11:35 GMT
மக்கும் குப்பையில் தயாரித்த இயற்கை உரம் சென்னையில் உள்ள முக்கிய மால்களில் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை:

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தினமும் 4930 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மட்கும் குப்பைகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது.

சென்னையில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள், 175 சிறு தொட்கள், 1711 உறை கிணறு மையங்கள், 214 வெர்மி உர மையங்கள் மூலம் மட்கும் குப்பைகளில் இருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வரை சென்னை மாநகராட்சியிடம் சுமார் 190 மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பில் இருந்தது. இந்த உரம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் அறிவித்தார்.

அதன்படி பொதுமக்கள் 9445194802 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டோ தங்களுக்கு தேவையான உரத்தின் அளவை குறிப்பிட்டு முழு முகவரியை கொடுத்தால் நேரடியாக வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படும்.

அதற்கான பணம் டெலிவரியின் போது வீட்டிலேயே பெறப்படுகிறது. இதன்மூலம் தற்போது வரை 9910 கிலோ இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1.98 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களின் ஆதரவை தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கிய மால்களில் இயற்கை உரம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, அமைந்தகரை ஸ்கைவாக், மயிலாப்பூர் சிட்டி சென்டர் உள்ளிட்ட மால்களிலும், விஜிபி தங்க கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்களில் இயற்கை உரம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News