செய்திகள்
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிக்கு சென்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

தூத்துக்குடியில் தேங்கி கிடக்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

Published On 2019-11-18 09:50 GMT   |   Update On 2019-11-18 09:50 GMT
தூத்துக்குடியில் தேங்கி கிடக்கும் மழை நீரால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே குளம் போல் தேங்கி கிடக்கிறது.

தூத்துக்குடி மாநகர பகுதிகளான ரஹ்மத் நகர், சின்னகண்ணுபுரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி தாளமுத்துநகர் ரோட்டில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கடற்கரை பகுதியான திரேஸ்புரம், பார்த்திபன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர்.

இதேபோல் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அதன் காரணமாக சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

கயத்தாறு மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பிவிட்டன. குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான அளவில் நேற்று வரை மழை பெய்தது. 
Tags:    

Similar News