செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க.வினரை தொட்டால்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Published On 2019-11-18 05:12 GMT   |   Update On 2019-11-18 05:12 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொண்டர்களை உசுப்பேற்றும் வகையில் ஆவேசமாக பேசியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து போனவர்கள் தற்போது இணைந்துள்ளனர். எங்களுக்குள் சகோதர சண்டை மட்டுமே நடந்துள்ளது. அ.தி.முக.வில் 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர். இதனால் உட்கட்சி சண்டை இருக்கத்தான் செய்யும். இனி அ.தி.மு.க. மட்டுமே ஆள வேண்டும்.

வசதி வாய்ப்பில்லாதவர்கள், வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது. இது கம்ப்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களை தேர்வு செய்து சீட்டு கொடுங்கள்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற அனைத்து பணிகளையும் மேற்கொள்வேன். 

தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வினரின் சட்டையை தொட்டால், தி.மு.க.வினரின் சட்டையை கிழிக்க வேண்டும். நம் வீட்டுக் கதவை தட்டினால் தி.மு.க.வினர் வீட்டுக் கதவை நாம் உடைத்து நொறுக்க வேண்டும்.

இது தொடர்பாக எந்த பிரச்சினை வந்தாலும் முழுக்க, முழுக்க உங்கள் பின்னால் உறுதுணையாக நான் இருப்பேன். 16 வயது முதல் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வருகிறேன். அதைப்பற்றி கவலை இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா என்னை வழி நடத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News