செய்திகள்
பாம்பு

பாகூரில் கட்டிட தொழிலாளி வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Published On 2019-11-17 16:19 GMT   |   Update On 2019-11-17 16:19 GMT
பாகூரில் கட்டிட தொழிலாளி வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்:

பாகூர் பழைய காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செல்லா என்ற சிவகுமார் (வயது28) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். சிவக்குமார் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.

இன்று காலை சிவக்குமார் வெளியே சென்று விட்டார். அவரது மனைவி சிவரஞ்சனி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது 6 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு வீட்டுக்குள்ளே சென்றதைப் பார்த்த சிவரஞ்சனி பாம்பு.... பாம்பு.... என்று அலறினார். பின்னர் பயந்து குழந்தையுடன் சிவரஞ்சனி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். ஆனாலும் பாம்புக்கு பயந்து அவர்கள் ஒதுங்கி நின்றனர்.

பின்னர் பாகூர் பங்களா வீதி பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் சமூக ஆர்வலர் விக்கி என்கின்ற விக்னேசை அழைத்து வந்தனர்.

அவர் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். அதனை ஒரு சாக்குப் பையில் அடைத்து பாகூர் ஏரிக்கரையோரம் உள்ள வனப்பகுதியில் விட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மழைக்காலங்களில் இந்த பகுதியில் இரவு நேரங்களில் வீட்டுக்குள் பாம்பு புகுவது அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News