செய்திகள்
அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

வெங்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2019-11-17 10:13 GMT   |   Update On 2019-11-17 10:13 GMT
வெங்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள வதட்டூர் கிராமத்திற்கு வதட்டூர்-ஆவடி வரையில் ஒரு மாநகர பஸ்சும், கோயம்பேட்டில் இருந்து வதட்டூர் வரை ஒரு பஸ்சும் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆவடி வரை இயக்கப்பட்டு வந்த பஸ்சை நிறுத்திவிட்டு கோயம்பேட்டுக்கு இரண்டு பஸ் இயக்கப்பட்டு வந்தன.கடந்த சில வாரமாக இரண்டு பஸ்களில் ஒரு பஸ்சை நிரந்தரமாக நிறுத்தி விட்டனர். மேலும் அந்த ஒரு பஸ்சும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதில்லை.

இதனால் பள்ளி-கல்லூரி செல்வோரும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை செய்வோரும் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வதட்டூர் வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக போக்கு வரத்துறை அதிகாரிகள் வந்து உறுதி கூறினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி னர்.

இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது

Tags:    

Similar News