செய்திகள்
ராஜேஸ்வரி பெற்றோருக்கு ஆறுதல் கூறும் முக ஸ்டாலின்

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதி - முக ஸ்டாலின் வழங்கினார்

Published On 2019-11-17 08:30 GMT   |   Update On 2019-11-17 08:30 GMT
கோவையில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் காயமடைந்த பெண்ணை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.
கோவை:

கோயம்புத்தூரில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்ததால், லாரி மோதியதில் கால் முறிவு ஏற்பட்டு ராஜேஸ்வரி பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த பெண்ணை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தி.மு.க. சார்பில 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அதன்பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க.வினரின் கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட பெண்ணின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க. பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் அதே இடத்தில் உயிரிழந்தார். இப்போது, கோவை சிங்காநல்லூரில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது நினைத்துப் பார்க்க முடியாதது.

லாரி டிரைவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் கொடிக்கம்பம் வைத்தவர்கள், விழா நடத்தியவர்கள், அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

விபத்து தொடர்பாக முதல்வரிடம் கேட்டபோது முதல்வர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். விபத்து சம்பவம் தனக்கு தெரியாது. செய்தி வரவில்லை என கூறுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தனக்கு தெரியாது எனக்கூறியது போல், இந்த சம்பவமும் தெரியாது என்கிறார். இது வெட்கப்படக்கூடியது. வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News