செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆன்லைன் டிக்கெட் முறை விரைவில் திரையரங்குகளில் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2019-11-16 09:23 GMT   |   Update On 2019-11-16 09:23 GMT
ஆன்லைன் டிக்கெட் முறை விரைவில் திரையரங்குகளில் நடைமுறைக்கு வரும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
சென்னை:

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: நிதியமைச்சரை சந்தித்திருக்கின்றீர்கள், கோரிக்கைகள் ஏதும் கொடுத்துள்ளீர்களா?

பதில்: சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைக்குப் பெயர் பெற்றுள்ளதைப் போல, கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய பகுதிகள், இந்தியா முழுவதற்கும் தேவையான தீப்பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிலுக்குப் பெயர் பெற்றுள்ளது.

தீப்பெட்டி தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களுக்கும் 12 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி உள்ளபோது, தீப்பெட்டிக்கு 18 விழுக்காடு என்ற ஒரு வேறுபாடு இருக்கின்ற காரணத்தினால், 18 விழுக்காடு என்றிருப்பதை 12 விழுக்காடாக குறைக்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். அவரும் அதனை பரிசீலிப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

கேள்வி: ஆன்லைன் டிக்கெட் தொடர்பாக ...

பதில்: அதற்காக இரண்டு முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். அந்த ஆய்வுக் கூட்டத்திலே சினிமாத்துறை என்பது முழுமையாக எங்கள் துறையின் கீழ் வராமல் அது உள்துறை மூலமாக வருகிறது. ஆகவே, உள்துறை செயலாளர், வணிகவரித் துறை செயலாளர் போன்ற உயர் அதிகாரிகளின் மட்டத்தில் எங்களுடைய துறையின் செயலாளர் மற்றும் இயக்குநர் போன்ற அதிகாரிகள், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட விரிவான ஆய்வுக் கூட்டத்தை இரண்டு முறை நடத்தியிருக்கின்றோம். அதில் ஒரு முடிவு எட்டப்படும் நிலையிலே இருக்கின்றது.

ஆன்லைன் டிக்கெட் வருகின்ற நேரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஒரு படத்திற்கு தினசரி எத்தனை காட்சிகள் திரையிடப்படுகிறது, எத்தனை காட்சிகள் மூலம் எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கிறது என்ற வெளிப்படைத் தன்மை அரசுக்கும் தெரியவரும். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும். இது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. விரைவில் இது நடைமுறைக்கு வரவிருக்கின்றது.

கேள்வி : முதல்-அமைச்சர் அண்மையில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்திருக்கிறார்கள், அதைப்பற்றி ஹைலட் செய்யப்பட்டிருக்கிறதா?

பதில்: நிச்சயமாக இருக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டிற்குச் சென்றுவந்த ஒரே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அது தமிழ்நாடு தொழில் சார்ந்த வெற்றிப் பயணமாக அமைந்தது. அந்தக் காட்சிகளெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, இந்தியா-சீனா நட்புறவுக்கான பிரதமர், சீன அதிபர் ஆகியோரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சிறப்பான முறையில் இரண்டு பெருந்தலைவர்களும் தமிழகத்தை பாராட்டியிருக்கின்றார்கள். சட்டம், ஒழுங்கில் மிகச் சிறப்பான மாநிலம் என்றும், அந்த மாநாடு ஒரு சிறப்பான வெற்றிகரமான மாநாடாக அமைந்தது என்றும் கூறியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பிரகதி மைதானத்திலுள்ள பொருட்காட்சியில் காட்சிப்படுத்தியிருக்கின்றோம்.

கேள்வி: இந்த வருடம் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு பாரதப் பிரதமரை அழைப்பது தொடர்பாக...

பதில்: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கென்று ஒரு கமிட்டி இருக்கிறது. அவர்கள் தான் அங்கு யாரை அழைப்பது என்பதை முடிவு செய்வார்கள். சென்ற முறை முதல்-அமைச்சரை அழைத்தார்கள். முதல்-அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டார். எனவே அந்தக் குழு பிரதமரை அழைத்தால், அதற்குண்டான ஏற்பாடுகளை அரசு செய்யத் தயாராக இருக்கின்றது.
Tags:    

Similar News