செய்திகள்
ஐஐடி மாணவி தந்தை

தற்கொலை செய்த ஐ.ஐ.டி. மாணவி தந்தையிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Published On 2019-11-16 06:56 GMT   |   Update On 2019-11-16 06:56 GMT
சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் இன்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை:

சென்னை கிண்டில் உள்ள ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா கடந்த 9-ந்தேதி விடுதி அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது செல்போனில் தனது தற்கொலைக்கு பேராசிரியர் பத்மநாபன் காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கோட்டூர்புரம் போலீஸ் தரப்பில் மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கூறும்போது, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். நேற்று அவர் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.



அதில் தனது மகள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். பின்னர் அப்துல் லத்தீப் கூறும்போது, ‘எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் எழுதிய கடிதத்தில் தனது சாவுக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனர் ஈஸ்வர மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழு அமைக்கப்படடது. இதில் விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை கமி‌ஷனர் மெக்லினா நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 4 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் இன்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கேரள இல்லத்தில் தங்கி உள்ள அவரிடம் போலீசார் மாணவியின் தற்கொலை சம்பவத்தில் தொடர்புடைய தகவல்களை கேட்டறிந்தனர்.

கோட்டூர்புரம் போலீசார் தரப்பில் மாணவி சென்னையில் தங்கி படிக்க விருப்பம் இல்லாமல் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாகவும் அப்துல் லத்தீப்பிடம் விசாரித்தனர். மேலும் படிப்பு, மதிப்பெண் சம்பந்தமாக மகளிடம் என்ன பேசினீர்கள் என்பது குறித்தும் விசாரித்தனர்.

அவர் தெரிவித்துள்ள தகவல்களை பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதை வைத்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்க உள்ளனர்.

Tags:    

Similar News