செய்திகள்
பெண்ணாடம் பகுதியில் மழை பெய்த காட்சி.

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2019-11-16 05:43 GMT   |   Update On 2019-11-16 05:43 GMT
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தற்போது பெய்த இந்த திடீர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. இதனால் விழுப்புரம் நகரில் உள்ள சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. இதேபோல் இன்று காலையும் விழுப்புரம் பகுதுகளில் லேசான சாரல் மழை பெய்தது.

திருவெண்ணைநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதி காலை லேசாக மழை பெய்ய தொடங்கியது. காலை 7.30 மணி அளவில் மிதமான மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் பெய்த இந்த மழையினால் சாலையோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

மேலும் அந்த பகுதியில் உளுந்து, நெல், சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டிருந்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் மிகுந்த அவதியடைந்து வந்தனர். தற்போது பெய்த இந்த திடீர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்ய தொடங்கியது. சுமார் 6.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை விட்டு, விட்டு தூரிக்கொண்டே இருந்தது

பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதுபோல் வீடூர், மணி முக்தா ஆகிய அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

கடலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக அதிகாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் இன்று அதிகாலை 3 மணி அளவில் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மஞ்சக்குப்பம், வண்டிபாளையம், திருப்பாதிரி புலியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை தூரிக் கொண்டே இருந்தது.

அதன் பிறகு சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு காலை 7 மணி வரை பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. தொடர்ந்து மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருமலைஅகரம், சவுந்திர சோழபுரம், முருகன்குடி, இறையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. 1 மணி நேரம் பெய்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் பெண்ணாடத்தில் உள்ள எல்லையம்மன் தெரு, மீனவர் தெரு ஆகிய பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப் படாததால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் கழிவுநீருடன் மழைநீர் கலந்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். வடிகால் வாய்க்கால்களை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பெண்ணாடம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் மழை நேரத்தில் பயணிகள் நிற்பதற்கு இடம்மில்லாமல் மழையில் நனைந்தபடி நின்றனர். மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையும் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது.

Tags:    

Similar News