செய்திகள்
வருமான வரித்துறை

கரூர் கொசுவலை நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

Published On 2019-11-16 04:44 GMT   |   Update On 2019-11-16 04:44 GMT
கரூர் கொசுவலை நிறுவனத்தில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெண்ணெய்மலை பகுதியை தலைமையிடமாக கொண்டு ஒரு தனியார் கொசுவலை உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அலுவலகம் வெண்ணெய் மலையிலும், கரூர்-சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிப்காட்டில் உற்பத்தி ஆலையும் உள்ளது. இந்த நிறுவனத்தின் கொசுவலை வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கிடையே இந்நிறுவனத்தார் கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதியம் அதிரடியாக வருமான வரித்துறையினர் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கரூர்,கோவை, மதுரை போன்ற இடங்களில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று வெண்ணெய் மலை அலுவலகம், சிப்காட் ஆலை, கரூர் ராம்நகரில் உள்ளவீடு உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மதியம் தொடங்கிய சோதனை நேற்று இரவு வரை நீடித்தது. பின்னர் மீண்டும் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தப்படுகிறது. இதில் கோடிக்கணக்கில் அந்த கொசுவலை நிறுவனத்தினர் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

சோதனையையடுத்து வெண்ணெய் மலை அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொசுவலை நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News