செய்திகள்
தூய்மை பணியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்த காட்சி.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தூய்மை பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2019-11-15 16:08 GMT   |   Update On 2019-11-15 16:08 GMT
உலக தர தினத்தையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
சேலம்:

உலக தர தினத்தையொட்டி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தூய்மை பணி நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.

தூய்மையை பேணுவோம், சுகாதாரத்தை காப்போம் என்ற தலைப்பில் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகளில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள், மருத்துவ கழிவுகள் மற்றும் ஆங்காங்கே தூக்கி வீசிய குப்பை கழிவுகளை அகற்றி சிறப்பு துப்புரவு பணியை மேற்கொண்டனர்.

இதேபோல், சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சியின் சார்பில் மாநகர பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியையும் மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கலெக்டர் ராமன் கூறுகையில், உலக தர தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-வது வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு முக்கிய பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் மழைநீர் தேங்குவதால் அதில் வளரக்கூடிய கொசுக்களினால் காய்ச்சல் ஏற்படுகிறது. மழைநீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை பாத்திரங்களிலோ அல்லது சிமெண்டு தொட்டிகளிலோ 3 நாட்களுக்கும் மேலாக திறந்து வைப்பதால் ‘ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டு டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு துப்புரவு பணியாளர்களாகிய நீங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு உங்களை ஈடுபடுத்தி கொண்டு சுகாதாரமான மாவட்டத்தை உருவாக்க பாடுபடவேண்டும், என்றார்.

இந்நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், துணை இயக்குனர் ஜெ.நிர்மல்சன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News