செய்திகள்
திருமணம் நிறுத்தம்

சுசீந்திரம் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2019-11-15 13:21 GMT   |   Update On 2019-11-15 13:21 GMT
சுசீந்திரம் அருகே சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்.ஜி.ஓ.காலனி:

சுசீந்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இன்று காலை ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமண விழாவுக்கு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர். விழாவுக்கு வந்தவர்களில் சிலர் மணப்பெண்ணை பார்க்க சென்றனர். அந்த பெண் சிறுமி போல இருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த சிலர் இது பற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சுசீந்திரம் போலீசார், குழந்தைகள் தடுப்பு பிரிவு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளை அழைத்து கொண்டு சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு திருமண வீட்டுக்கு சென்ற போலீசாரும் அதிகாரிகளும் மணமக்களின் பெற்றோரை சந்தித்து அவர்களின் வயது மற்றும் விபரங்களை கேட்டனர். இதில் மணப்பெண் திருமண வயதை அடையவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் சிறுமியின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறியதோடு, திருமண வயதை எட்டும் முன்பு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை எடுத்து கூறினர்.

சிறுமியை திருமணம் செய்ய இருந்தவர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவருக்கும் அறிவுரைகள் கூறப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் திருமணத்திற்கு தயாராக இருந்த சிறுமி மற்றும் மணமகனை கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர்.

Tags:    

Similar News