செய்திகள்
மாலினி

ராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

Published On 2019-11-15 08:54 GMT   |   Update On 2019-11-15 08:54 GMT
ராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராயபுரம்:

திருவொற்றியூர் வள்ளுவர் நகர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மாலினி (வயது 28). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினியை பிரசவத்துக்காக ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதில் மாலினி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மாலினி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். உரிய சிகிச்சை அளிக்காததால் மாலினி இறந்துவிட்டதாக குற்றம்சாட்டி அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாக்டர்களிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை உதவி கமி‌ஷனர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மாலினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, “மாலினிக்கு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை. அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags:    

Similar News