செய்திகள்
வானிலை நிலவர வரைபடம்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2019-11-15 07:27 GMT   |   Update On 2019-11-15 07:27 GMT
திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது.

வங்கக் கடல், அரபிக் கடலில் உருவான காற்றழுத்த காரணமாக மழை பெய்த நிலையில் அது புயலாக மாறி தமிழகத்தை விட்டு விலகி சென்றதால் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்து வறண்ட வானிலை காணப்பட்டது.

காற்றின் ஈரப்பதத்தை புயல் ஈர்த்து சென்றதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கியது. கடல் காற்றின் வேகம் குறைந்தது. இதன் காரணமாக உருவான வெப்ப சலனத்தால் சென்னையில் மீண்டும் மழை பெய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இன்று அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.

எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், கிண்டி, வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, மணலி, திருவொற்றியூர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், வேலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூர், காயல்பட்டினம் தலா 13 செ.மீ மழை பெய்துள்ளது. சூலூர் 8 செ.மீ, சோளிங்கர், சாத்தான் குளம் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News