செய்திகள்
பாஜக

குண்டு, குழி சாலைகளால் விபத்தில் சிக்கும் மக்கள்: பாரதீய ஜனதா புகார்

Published On 2019-11-13 13:23 GMT   |   Update On 2019-11-13 13:23 GMT
புதுவை மாநிலத்தில் உள்ள சாலைகள் மிக மோசமாக குண்டும், குழியுமாக இருப்பதால் மக்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுவதாக பாஜக புகார் கூறியுள்ளது.

புதுச்சேரி:

பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்துகின்ற சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் மிக மோசமாக குண்டும், குழியுமாக, கற்கள் நிறைந்த மலைபாதை போல் காட்சி அளிக்கிறது.

அனைத்து பகுதிகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு, மூடப்பாமலும் பணி நிறைவடையாமலும் உள்ளது.

மேலும் பல இடங்களில் பெயரளவில் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கி பூஜை போடப்பட்டு ஒப்பந்தகாரருக்கு பணம் கொடுக்காமல் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முதியோர், பெண்கள், குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் விபத்துக்குள்ளாதல் தொடர் கதையாக நடந்து வருகிறது.

பிற மாநிலங்களில் 2 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் டயர்கள் குறைந்தது 3 ஆண் டுகள் பழுதடையாமல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் புதுவையில் குண்டு குழியுமான மோசமான சாலையால் 2 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களின் டயர்கள் 6 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதனால் ஒட்டு மொத்த பொது மக்களுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

பொருளாதார இழப்பு மட்டுமின்றி, இன்று வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் கழுத்து வலி, முதுகு வலி போன்ற பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக் கபட்டு டாக்டர்களிடம் பல ஆயிரங்களை அளித்து சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் 2 சக்கர வாகனங்களில் பயணம் செய்தால் மரண பயத்தை ஏற்படுத்துகிறது.

சுற்றுலா தளமான புதுவைக்கு வரும் பிற மாநிலத்தவர் மட்டுமின்றி பிற நாட்டினரும் இம்மாநிலத்தின் நன்மதிப்பை குறைக்கும் வகையில் ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது.

பல ஆயிரம் மக்கள் தினமும் பயன்படுத்தி வருகிற ரெட்டி யார்பாளையம் சாலை பணி நிறைவடையாமல் குழிகள் தோண்டப்பட்டு அப்படியே போடப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் நலன் கருதி போர்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

வசதி படைத்தவர் பகுதிகளை தவிர ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் தரமானதாக சிறிதும் பழுதில்லாமல் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற முறையில் இருந்தால் அதை பொதுமக்கள் படம் எடுத்து புதுவை பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இப்படி புகைப்படங்கள் வரும் பட்சத்தில் இத்தரமான சாலைகள் அமைத்து கொடுத்த முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் பாரதீய ஜனதா கட்சி சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் சுழல்கோப்பையும், நற்சான்றி தழும் வழங்கப்படும் என அறிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News