செய்திகள்
கோப்பு படம்

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில்

Published On 2019-11-12 11:55 GMT   |   Update On 2019-11-12 11:55 GMT
புதுவையில் திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த தயாளன் மகள் மகேஸ்வரி. இவரை கோவிந்தசாலையை சேர்ந்த பிரதீப் என்பவர் காதலித்து திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்தார்.

பின்னர் தாழ்த்தப்பட்ட சமூகம் எனக்கூறி மகேஸ்வரியை திருமணம் செய்ய பிரதீப் மறுத்தார்.

மேலும் பிரதீப்புடன் அவரது தந்தை கஜேந்திரன், தாய் பொற்கிலை கிருஷ்ண வேணி ஆகியோரும் தகாத வார்த்தைகளால் மகேஸ்வரியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து மகேஸ்வரி வன்கொடுமை தடுப்பு பிரிவில் (பி.சி.ஆர். செல்லில்) புகார் தெரிவித்தார். இதையடுத்து பிரதீப் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புதுவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில் 3 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பிரதீப் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி, பிரதீப்பிற்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.500 அபராதம், கஜேந்திரன், பொற்கிலை கிருஷ்ணவேணிக்கு 6 மாத ஜெயில் தண்டனை ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் ராமச்சந்திரமூர்த்தி ஆஜராகி குற்றவாளிகளுக்கு எதிராக வாதித்து தண்டனை பெற்று தந்தார். போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்கில் திறம்பட செயல்பட்டனர்.
Tags:    

Similar News