செய்திகள்
மழை

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை

Published On 2019-11-12 08:30 GMT   |   Update On 2019-11-12 08:30 GMT
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று பெரியகுளம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

இரவு இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையினால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இரவு 10 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் விழுந்த இடி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த இடி சத்தம் கொடைக்கானல் வரை உணரப்பட்டது.

கடந்த சில நாட்களாக மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணைகளில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே இந்த அணைகளின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையினால் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 124 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 அடி. வரத்து 414 கன அடி. திறப்பு 30 கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.60 அடி. வரத்து 1262 கன அடி. திறப்பு 1520 கன அடி.

வைகை அணை நீர்மட்டம் 62.47 அடி. வரத்து 1765 கன அடி. திறப்பு 3690 கன அடி.

தேக்கடி 5.6, கூடலூர் 6.3, மஞ்சளாறு 52, சோத்துப்பாறை 37, மருதாநதி 63.2, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News