செய்திகள்
மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)

விமான நிலையம்-கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் வசதி

Published On 2019-11-12 04:59 GMT   |   Update On 2019-11-12 04:59 GMT
ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 15 கி.மீட்டர் தூரத்துக்கு ஜி.எஸ்.டி. சாலையில் விமான நிலையம்- கிளாம்பாக்கத்துக்கு புதிதாக மெட்ரோ ரெயில் வசதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை - விமான நிலையத்துக்கு தற்போது பயணிகள் சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதை அமைக்க திட்டப்பணி ஆய்வுமுழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கத்துக்கு 15.3 கி.மீட்டர் தூரத்துக்கு ஜி.எஸ்.டி. சாலையில் புதிய மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் வருகிற 2021-ம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழித்தடத்தில் விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர் ஆர்.எம்.கே.நகர், வண்டலூர், வண்டலூர் வனவியல் பூங்கா, கிளாம்பாக்கம் உள்பட 13 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

புதிய மெட்ரோ ரெயில் வழித்தடம் ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட பாதையில் அமைக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய மெட்ரோ ரெயில் வழித்தட பாதை கிளாம்பாக்கம் பஸ் டெர்மினல் வரை நீட்டிக்கப்படுகிறது

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தென்சென்னை பகுதியில் அனைத்து பகுதி மக்களையும் கவரும் விதமாக புதிய மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 12.3 கி.மீட்டர் தூரத்துக்கு ஜி.எஸ்.டி. சாலையில் உயர் மட்டபாதையில் மெட்ரோ ரெயில் வழித்தட பாதை உருவாக்கப்படும்.


ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 13 ரெயில் நிலையங்கள் கட்டப்படுகிறது. இந்த பணிகள் குறித்த திட்ட அறிக்கை 10 மாதங்களில் தயாரிக்கப்படும். 2021-ல் இந்த வழித்தட பாதை பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News