செய்திகள்
கோப்பு படம்

பணி நிரந்தரம் வேண்டி மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-11 15:59 GMT   |   Update On 2019-11-11 15:59 GMT
தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:

மாநில செயலாளர் ஆண்டோ ஜேசுதாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திட்ட தலைவர் காதர் மைதீன், துணைச் செயலாளர் நாகராஜ், ஆரோக்கியசாமி, துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநில செயலாளர் ஜேசுதாஸ் தெரிவிக்கையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வாரியத்தில் பல்வேறு நிலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறோம்.

தானே, வர்தா, ஒக்கி மற்றும் கஜா ஆகிய அனைத்து பேரிடர் காலங்களிலும் நாங்கள் கடுமையாக பணியாற்றியுள்ளோம். பணி நிரந்தரம் வேண்டி பல முறை போராடி மனுக்கள் அளித்துள்ளோம்.

மின்சாரத்துறை அமைச்சர், தலைமை பொறி யாளர் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். தினக்கூலி ரூ.380 வழங்கப்படும் என்ற கோரிக்கை இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு மாறாக வெளி நபர்களை பணியமர்த்தக் கூடிய கேங் மேன் என்ற புதிய பணி இடத்துக்கான அறிவிப்பு எங்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நிரந்தர தொழிலாளர்கள் செய்யக்கூடிய பணிகளில் ஈடுபட்ட பல ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

எனவே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை தொடர உள்ளோம். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். அதன் பின் தங்கள் கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக் டரிடம் அளித்து சென்றனர்.
Tags:    

Similar News