செய்திகள்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

காற்று மாசுவால் சுவாச கோளாறு ஏற்படவில்லை - அமைச்சர் உதயகுமார்

Published On 2019-11-11 09:37 GMT   |   Update On 2019-11-11 09:37 GMT
சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டதாகவும், ஆனால் காற்று மாசுவால் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
சென்னை:

சென்னையில் காற்று மாசு கடந்த சில நாட்களாக அதிகரித்தது. 50-க்குள் இருக்க வேண்டிய காற்று மாசு 256 வரை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, பேரிடர் மேலாண்மை இயக்குனர் வெங்கடாசலம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி, கூடுதல் இயக்குனர் வடிவேலன், ஐ.ஐ.டி.பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் காலை நேரங்களில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. ஆனால் இன்று காற்று மாசு குறைந்துள்ளது.



தொழிற்சாலைகள் மற்றும் வாகன புகை, கட்டுமான தூசி, ஆங்காங்கே குப்பைகளை எரிப்பது போன்ற காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.

கடல் காற்று வீசும்போது காற்று மாசு குறைந்து விடும். கடந்த 4 நாட்களாக கடல் காற்று எதிர்பார்த்த அளவுக்கு வீசாததால் காற்று மாசு அதிகரித்தது.

ஆனால் இன்று கடல் காற்று ஓரளவு வீசியதால் காற்று மாசு குறைந்துள்ளது. வேளச்சேரியில் காற்று மாசு நேற்று 256 ஆக இருந்தது. இன்று 238 ஆக குறைந்துள்ளது. இது படிப்படியாக குறையும். காற்று மாசு காரணமாக சென்னையில் யாருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை. காற்று மாசைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News