செய்திகள்
பொதுக்குழுவில் முக ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

Published On 2019-11-10 04:47 GMT   |   Update On 2019-11-10 04:47 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இன்று காலை தொடங்கியது.
  • திமுக பொதுக்குழு கூட்டம் ராயப்பேட்டையில் இன்று காலை தொடங்கியது.
  • திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
  • மேடையில் வைக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

சென்னை:

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில், அக்டோபர்) 6-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த மாதம் 31-ம் தேதி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 10-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் தொடங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர். 

பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
Tags:    

Similar News