செய்திகள்
ரங்கசாமி

கதிர்காமம் பெண்கள் பள்ளி சீரமைப்பு- ரங்கசாமி அதிரடி நடவடிக்கை

Published On 2019-11-07 17:21 GMT   |   Update On 2019-11-07 17:21 GMT
கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பெண்கள் பள்ளியை சீரமைக்க எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதுச்சேரி:

கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பெண்கள் பள்ளியில் போதிய இடவசதி இல்லை. 6 முதல் 8-ம் வகுப்புகள் பள்ளி எதிரில் தற்காலிக ஷெட்டில் 7 ஆண்டாக இயங்கி வந்தது. இந்த கட்டடம் விரிசல் விழுந்ததால் பயன்படுத்த தகுதியில்லை என பொதுப்பணித்துறை அறிவித்தது.

தற்காலிக இடமும் மூடப்பட்டதால் கடந்த மாதம் 29-ந் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகள் படிக்க இடமின்றி தவித்தனர். இதனால் தில்லையாடி வள்ளியம்மை பள்ளி 2 ஷிப்டுகளாக இயங்கியது.

இந்திராநகர் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத் தில் காலியாக உள்ள வகுப்பறை கட்டடத்திற்கு 6 முதல் 8-ம் வகுப்புகளை மாற்ற கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு மாணவிகள், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4-ந் தேதி மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, ஜெயபால் எம்.எல்.ஏ. ஆகியோர் பள்ளிக்கு சென்று பழுதான வகுப்பறை கட்டடத்தை ஆய்வு செய்தனர். பொதுப் பணித்துறை அதிகாரிகளை அழைத்து அந்த கட்டடத்தை தற்காலிகமாக சீர்செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் கட்டடத்தை சரிசெய்ய எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி பெற்று தருவதாகவும், உடனடியாக திட்டமதிப்பீடு தயார் செய்து பணியை தொடங்கி ஒரு மாதத்தில் முடித்துக்கொடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு அதிகாரிகள் சம்மதித்தனர். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் அருணாச்சலம், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News