செய்திகள்
தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட 15 பேரிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட காட்சி.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்- 100 பேர் சிக்கினர்

Published On 2019-11-06 12:26 GMT   |   Update On 2019-11-06 16:39 GMT
திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த வியாபாரிகள் 100 பேர் சிக்கினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டு  சேவையாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத்திற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இதன்மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். பயணிகள் அனைவரும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம், வெளிநாட்டு பணம், கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தப்படும் சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு தங்கம் கடத்தல் சம்பவம் அதிகம் நிகழ்ந்ததையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

2018 ஆகஸ்டு மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் தொடர்ந்து 2 நாட்கள் இந்த சோதனை நடந்தது. அப்போது தங்கம் கடத்த லுக்கு விமான நிலைய அதிகாரிகள் சிலரே உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. அவர்களை சி.பி.ஐ. அதிகா ரிகள் கைது செய்தனர். அதன் பிறகு சில மாதங்கள் தங்கம் கடத்தல் குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் தொடங்கியது. 

கடந்த  ஒரு  ஆண்டாக எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வந்தது. தினமும் பயணிகளிடம் இருந்து அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பெண் பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்தும், சிலர் மின்சாதனங்கள், பேட்டரிகள், செல்போன்கள் ஆகிய வற்றிற்குள் மறைத்தும் நூதன முறைகளில் கடத்தி கொண்டு வந்தனர். அதிகாரிகளும் நவீன ஸ்கேன் எந்திரங்கள் மூலம் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். 

கடத்தலை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை களை எடுத்தபோதிலும் குறைந்தபாடில்லை. எனவே மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 
இந்தநிலையில்  துபாய், சிங்கப்பூர்,  மலேசியா ஷார்ஜா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை இயக்குனர் கார்த்திக் கேயன் தலைமையில் 22 அதிகாரிகள்அடங்கிய குழுவினர் நேற்றிரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். 

இரவு 10.30 மணியில் இருந்து நள்ளிரவு வரை சிங்கப்பூர், ஷார்ஜா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். 

பயணிகள் கொண்டு வந்த மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களில் நவீன கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டனர்.  ஒவ்வொரு பயணியிடமும் தனித்தனியாக சோதனை நடத்தப்பட்டது. இதில் 100 பேர் தங்களது உடைமைகளுக்குள் மறைத்து, வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 30 கிலோ தங்கம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக அதன் மதிப்பு ரூ.11 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தங்கத்தை எடுத்து வந்தவர்கள் அந்த தங்கத்தை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர்? இந்தியாவில் யாருக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தனர்? தங்கம் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?  குருவிகளாக செயல்பட்டு கடத்தலில் ஈடுபட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதிக அளவு தங்கம் கடத்தி வந்த 15 பேரை அதிகாரிகள், திருச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பு போல் அதிகாரிகள் யாரும் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் பிடிபட்ட 100 பேரும் வியாபாரிகள் ஆவர். மற்ற பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தி விட்டு அனுப்பி வைத்தனர். சோதனையில் சிக்கிய வியாபாரிகளிடம் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து  அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை வரை இந்த விசாரணை நீடிக்கும் என தெரிகிறது. அதன்பிறகு கடத்தல் சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News