செய்திகள்
விடுதலை சிறுத்தையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து கன்னியகோவிலில் விடுதலை சிறுத்தைகள் மறியல்

Published On 2019-11-05 11:22 GMT   |   Update On 2019-11-05 11:22 GMT
திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து கன்னியகோவிலில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகூர்:

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது யாரோ மர்ம நபர்கள் சேறு சகதி வீசி அவமதிப்பு செய்தனர். இதனை கண்டித்து தமிழகத்தின் மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதுபோல திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து பாகூர் தொகுதி விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் கன்னியகோவிலில் 4 முனை சந்திப்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் மெய்யப்பன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் விடுதலைசிறுத்தை கட்சியை சேர்ந்த பலரும் பங்கேற்று திரவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது தமிழகஅரசு கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை ஏற்று விடுதலைசிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News