செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரசு பள்ளிகளின் கட்டமைப்புக்கு நிதி திரட்ட இணைய தளம்- முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

Published On 2019-11-05 09:19 GMT   |   Update On 2019-11-05 09:19 GMT
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பையும் பிற வசதிகளையும் மேம்படுத்துவதற்குப் பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுவதற்காக இணைய வழி நிதி திரட்டும் இணைய தளத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பையும் பிற வசதிகளையும் மேம்படுத்துவதற்குப் பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுவதற்காக இணைய வழி நிதி திரட்டும் இணைய தளத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இணைய தள முகவரி- https://contribute.tnschools.gov.in

பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் 24 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் மற்றும் பெண்டறஹள்ளி கிராமங்களில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பொதுப்பணித்துறை வளாகத்தில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலகக் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பால்வளத்துறையின் சார்பில் தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கிராமத்தில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைப்பதிவாளர் (பால் வளம்) அலுவலகக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், 39 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத் திட்டத்தை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இத்திட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் பரிட்சார்த்த முறையில் காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு தலா 2 ஊர்திகள் வீதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விவசாயிகளிடையே இச்சேவை நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்ட 22 கால்நடை அவசர மருத்துவ ஊர்தியான “அம்மா ஆம்புலன்ஸ்” வாகனங்களின் சேவையை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 ஓட்டுநர்களுக்கு அம்மா ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தில், கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சிறிய கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு மடங்கக் கூடிய பரிசோதனை மேஜை அமைக்கப்பட்டுள்ளது.

வாகனம் செல்ல இயலாத இடங்களில் உள்ள நடக்க இயலாத கால்நடைகளை அவசர ஊர்திக்கு எடுத்து வருவதற்கு ஏதுவாக அகற்றி பொருத்தக்கூடிய தள்ளுவண்டி வசதி செய்யப்பட்டுள்ளது.

நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிட ஏதுவாக ஒரு டன் எடை கொண்ட கால்நடையையும் தாங்கக்கூடிய வகையில் சக்திவாய்ந்த மின்தூக்கி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், மின் இணைப்பு தங்கு தடையின்றி கிடைத்திட இன்வர்டர் மற்றும் இரவில் மின்சார வசதியில்லாத இடத்தில் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வாகனத்தின் வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய பெரிய ஒளிவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி கால்நடை பராமரிப்பு துறைப் பணிகள் மற்றும் திட்டங்கள் பற்றி விரிவாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் தொலைக்காட்சி ஒன்று வாகனத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தின் பக்கவாட்டு வெளிப்புறத்தில் துறைப்பணிகளை விளக்கும் ஒளிரும் மின்பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் அம்மா ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சை ஊர்தி இயக்கப்படும். இந்த சேவை “1962” என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் விவசாயிகள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News