செய்திகள்
திருட்டு நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டு உறவினர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2019-11-04 18:01 GMT   |   Update On 2019-11-04 18:01 GMT
சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டு உறவினர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம்:

சேலம் நரசோதிப்பட்டி ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவருடைய மனைவி லட்சுமி. கடந்த 1-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை சின்னசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து இருப்பதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து அவர்கள் கோவையில் உள்ள சின்னசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 10 பவுன் தங்க காசு, நகை மற்றும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் வீட்டில் இருந்த விலை உயர்ந்த டி.வி.யும் திருட்டு போனது.

இதுதொடர்பாக சின்னசாமி சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சின்னசாமி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி, தற்போது புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்ட அருண் சக்தி குமார் மற்றும் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சின்னசாமி வீடு பூட்டி கிடந்ததை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் ஆட்கள் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை, பணம், டி.வி. ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து, பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தும், சந்தேகப்படும் நபர்களை பிடித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். மேலும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இரவு நேரத்தில் திருட்டு நடந்து இருக்கலாம். திருட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப் படுவார்கள், என்றனர்.
Tags:    

Similar News