செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Published On 2019-11-04 08:21 GMT   |   Update On 2019-11-04 08:21 GMT
முந்தைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்ப பெறக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை:

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் நீட் தேர்வு தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்து அதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.

‘நீட் தேர்வு கொணடு வந்தபிறகு பயிற்சி மையங்கள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுமார் 5 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களே அதிக மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர் என்பதை அறிவதில் வேதனையாக உள்ளது. 



இது பணம் செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவர்களை வேறுபடுத்தும் செயலாகும். பயிற்சி மையங்களால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை. எனவே, முந்தைய காங்கிரஸ்-திமுக அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப்பெறக்கூடாது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பிற மாநிலங்களில் நீட் ஆள்மாறாட்ட புகார் ஏதேனும் வந்துள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இதேபோல் நீட் முறைகேடு தொடர்பாக நேரடியாக புகார் வந்துள்ளதா? என்பது குறித்து சிபிஐ அமைப்பும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News