செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை விவரங்களை பகிரங்கப்படுத்த முடியாது - சிபிஐ

Published On 2019-11-04 08:02 GMT   |   Update On 2019-11-04 08:02 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை விவரங்களை பகிரங்கப்படுத்த முடியாது என்று ஐகோர்ட்டில் சிபிஐ தெரிவித்துள்ளது.
சென்னை:

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ படம் எடுத்து ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது.

இதுகுறித்து கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும், அதன்பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கும் மாற்றப்பட்டது. இந்த வழக்கில், திருநாவுக்கரசு உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கின் சி.பி.ஐ. புலன் விசாரணையை ஐகோர்ட்டு மேற்பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு பெண் வக்கீல்களுக்கான சங்கத்தின் தலைவர் வக்கீல் கே.சாந்தகுமாரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இதேபோல அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல அமைப்புகள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 16-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இடைக்கால குற்ற பத்திரிகையை கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டதாகவும், அதில் 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள்ளதாகவும், 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. இடைக்கால குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் கே.சீனிவாசன், ‘கடந்த முறை விசாரணையின்போது இடைக்கால குற்றப்பத்திரிகை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றின் நகல்களை வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் கேட்கின்றனர். அவற்றை வழங்க முடியாது. பாலியல் தொடர்பான வழக்கின் புலன் விசாரணை விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பகிரங்கப்படுத்த முடியாது’ என்று கூறினார்.



மேலும் அவர், ‘இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோருக்கு எதிரான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும், இந்த வழக்கில் கைதான 5 பேரையும் வழக்கு விசாரணை முடியும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் சி.பி.ஐ. தரப்பின் விருப்பம். அதேநேரம், இந்த வழக்கை ஐகோர்ட்டு மேற்பார்வையிடுவதில் சி.பி.ஐ. தரப்புக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஐகோர்ட்டு கண்காணிக்கலாம்.

இந்த வழக்கின் விசாரணை விவரங்களை அவ்வப்போது ரகசிய அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்படும். ஆனால், 3-வது நபர் இந்த புலன் விசாரணையை பார்வையிட அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால், அது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது மனுதாரர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால், அதை சி.பி.ஐ. விசாரணை அதிகாரியிடம் தாராளமாக ஒப்படைக்கலாம்’ என்றும் கூறினார்.

அகில இந்திய மாதர் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக 4 வீடியோக்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை மாற்றப்பட்டபோது, அதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்கவில்லை’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘அந்த 4 வீடியோ காட்சிகளையும் இப்போது சி.பி.ஐ. விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும். அது குறித்து அதிகாரி விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மனுதாரர் சாந்தகுமாரி சார்பில் ஆஜரான வக்கீல் ரீட்டா சந்திரசேகர், ‘பொள்ளாச்சி வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் விதமாகத்தான் மனுதாரர் செயல்படுகிறார்’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘பாலியல் சம்பவம் தொடர்பான ஆவணங்கள் எதுவாக இருந்தாலும், அதை சி.பி.ஐ அதிகாரியிடம் ஒப்படைக்கலாம்’ என்று உத்தரவிட்டனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 3-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று சி.பி.ஐ. புலன் விசாரணையின் நிலை குறித்த ரகசிய அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News