செய்திகள்
சூரனை வதம் செய்த முருகப் பெருமான்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்

Published On 2019-11-02 12:22 GMT   |   Update On 2019-11-02 12:22 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து முருகன் அருளை பெற்றனர்.
திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் இருந்து வந்தனர்.
 
இதற்கிடையே, கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது.

மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார்.

அதன்பின், சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

இந்நிலையில், சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.



முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறிய சூரனை சுவாமி வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறிய சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சுவாமி தன்னுடன் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொண்டார்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் மனிதத் தலைகளாக காணப்பட்டன. திரளாக கூடியிருந்த பக்தர்களின் கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் வானை பிளந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News