செய்திகள்
வைகை அணை (கோப்புப்படம்)

65 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

Published On 2019-11-01 10:20 GMT   |   Update On 2019-11-01 10:20 GMT
வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டியுள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கியது. தமிழக - கேரள பகுதியில் மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் வராக நதி, கொட்டக்குடி, பாம்பனாறு, பூவலிங்க ஆறு ஆகிய வைகை அணையின் பல்வேறு துணை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.

வரு‌ஷநாடு, வெள்ளி மலை பகுதிகளில் பெய்த மழையால் மூல வைகையிலும், சிற்றாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது தவிர பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீரும் வைகை அணையை வந்தடைந்தது.

இதனால் வைகை அணையின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 64.60 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3661 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1500 கன அடி தண்ணீரும் மதுரை மாநகர குடிநீருக்கு 60 கன அடி தண்ணீரும் என மொத்தம் 1560 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4542 மில்லியன் கன அடியாக உள்ளது.

66 அடியை எட்டும் போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 68 அடியை எட்டும் போது 2-வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு 69 அடியை எட்டியதும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.20 அடியாக உள்ளது. வரத்து 2337 கன அடி. திறப்பு 1640 கன அடி. இருப்பு 4309 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து 406 கன அடி. உபரி நீராக 322 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.20 அடி. முழு கொள்ளளவை எட்டி விட்டதால் அணைக்கு வரும் 166 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.55 மில்லியன் கன அடி.
Tags:    

Similar News