செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.150 கோடிக்கான வங்கி கடன் உதவித்தொகையை வழங்கினார்.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கி கடன் வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

Published On 2019-11-01 06:37 GMT   |   Update On 2019-11-01 06:37 GMT
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 525 பேருக்கு பணி நியமன ஆணை, குடிநீர் வாரியத்தில் 279 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

இதனுடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கி கடன் உதவி வழங்குதல், ரூ.550.50 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் திறப்பு விழா, ரூ.112.62 கோடிக்கு புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக வங்கியின் நிதி உதவியுடன் ‘தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்’ என்ற ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டம் ரூ.918 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டமானது, 26 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில், 3 ஆயிரத்து 994 ஊராட்சிகளில் 2 கட்டங்களாக 6 வருடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.172 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும் வெற்றியடைந்த திட்டங்களில் முக்கியமான திட்டம் மகளிர் சுய உதவி குழுத் திட்டமாகும். சுமார் ரூ.57 ஆயிரத்து 876 கோடியே 71 லட்சம் வங்கிகடன் வழங்கப்பட்டு பல்வேறு தொழில்கள் இன்றைக்கு மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக 2018-19-ம் ஆண்டில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 612 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மிகுதியாக ரூ.11 ஆயிரத்து 449 கோடி ரூபாய் வழங்கி ஜெயலலிதாவின் அரசு சாதனை படைத்துள்ளது.

2019-2020 நிதியாண்டில் ரூ.12 ஆயிரத்து 500 கோடி வங்கிக்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.5 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் 170 பேருக்கும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ-மாணவிகள் 60 பேருக்கு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 679 பேருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

பொறியியல், மருத்துவம் உள்பட பாடப்பிரிவுகளை படிக்கும் 315 மாணவ-மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் நன்றி கூறினார்.
Tags:    

Similar News