செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதிக்கெடு

Published On 2019-10-31 12:38 GMT   |   Update On 2019-10-31 12:38 GMT
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கடந்த 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு, நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார். 

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். அதன்பின், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இதுவரை 2,160 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர், பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு நன்றி. கடலூர், திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரத்தில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியுள்ளனர். மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவர்களும் தொடர்ந்து பணிக்கு திரும்பி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். முதலமைச்சரின் ஆலோசனைப்படி பணிக்கு திரும்ப அவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும்; புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

மருத்துவர்களுடன் துறை செயலரும், நானும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்தார்.
Tags:    

Similar News