செய்திகள்
சரிதா நாயர்

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2019-10-31 10:18 GMT   |   Update On 2019-10-31 10:59 GMT
காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை:

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரிதா நாயர். இவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் கோவை வடவள்ளியில் நிறுவனம் ஒன்றின் மூலம் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தனர். இந்த நிறுவனம் மூலம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபர் தியாகராஜன், தொண்டு நிறுவன தலைவர் மற்றும் சிலரிடம் பல லட்சம் பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக நடிகை சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், அவர்களின் நிறுவன மேலாளர் ரவி ஆகியோர் மீது கோவை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று மதியம் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது நடிகை சரிதா நாயர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். பிற்பகல் 3.30 மணியளவில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
Tags:    

Similar News