செய்திகள்
கோவையில் சோதனை நடந்த சமீர், சவுகர்தீன் வீட்டை படத்தில் காணலாம்

தமிழகத்தில் 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. சோதனை

Published On 2019-10-31 03:41 GMT   |   Update On 2019-10-31 10:18 GMT
தமிழகத்தில் கோவை, நாகூர், காயல்பட்டிணம், திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை:

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் குண்டு வெடிப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 500-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.




உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாரூதீன் (32), போத்தனூர் சாலை திருமால் நகர் அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடம் ஷேக் இதயத்துல்லா (29), குனியமுத்தூர் அபுபக்கர் (29), போத்தனூர் மெயின் ரோடு உமர் நகர் சதாம் உசேன் (26), தெற்கு உக்கடம் இப்ராகிம் என்கிற ஜாகின்ஷா (26) உள்ளிட்ட 7 பேர் வீடுகளில் கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது மடிக்கணினி, பென் டிரைவ், தோட்டாக்கள், சி.டி.க்கள், செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹமிசினுடன் முகமது அசாரூதீன் முகநூல் மூலம் தொடர்பில் இருந்ததும், இவர்கள் 6 பேரும் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை சமூக வலைதளத்தில் பரப்பி வந்ததும் தெரிய வந்தது.

இந்த கும்பலின் தலைவனாக முகமது அசாரூதீன் செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது அசாரூதீனை கைது செய்து அழைத்து சென்றனர்.

ஷேக் இதயத்துல்லா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரித்தபோது அவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஷேக் இதயத்துல்லாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் கோவையை சேர்ந்த 2 பேர் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த சமீர் (22), உக்கடம் லாரி பேட்டை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த சவுகர்தீன் (30) என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இன்று கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. டி.எஸ்.பி. சாகுல் அமீது தலைமையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை 6 மணிக்கு கோவை வந்தனர்.

அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து சமீர், சவுகர்தீன் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவை போலீசார் 2 பேரின் வீடுகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சோதனையின் முடிவில் தான் அவர்களது வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரிய வரும்

சோதனை நடைபெற்று வரும் சமீர் என்ஜினீயரிங் படித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சவுகர்தீன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் கோவை வந்தார்.

உக்கடம் லாரி பேட்டையில் டிபன் கடை நடத்தி வருகிறார். கோவையில் 2 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் நடத்தி வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை அடுத்த மேலவாஞ்சியம் அடுத்த முட்டம் சேவா பாரதி நகரை சேர்ந்தவர் அஜ்மல் (வயது 22).

இவர் மீது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

காலை 5 மணியளவில் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அஜ்மல் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் அவர் இல்லை. பெற்றோர் மட்டுமே இருந்தனர்.



நாகூர் மியாந் தெருவில் உள்ள உறவினர் சாதிக் அலி என்பவரது வீட்டில் அஜ்மல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் ஐ.என்.ஏ. அதிகாரிகள் சிறிது நேரம் சோதனை நடத்தினர். அஜ்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

கோவையில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இனாம்குளத்தூர் நடுத்தெருவில் ஒருவரது வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். வீட்டில் இருந்தவர்களை அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்காததோடு, யாரும் வீட்டிற்குள் வராதவாறு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், செல்போன்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிரடியாக ஆய்வு செய்தனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் கே.டி.எம். தெருவை சேர்ந்த ரிபாயிதீன் மகன் அப்துல்லா ஷாகத்அலி (வயது 30) என்பவரது வீட்டிலும் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்துல்லா ஷாகத்அலி அப்பகுதியை சேர்ந்த செய்யது என்பவருக்கு கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இதைத்தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு பாதுகாப்பிற்காக திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் நூர்முகமது. இவரது மகன் முகமது சிராஜூதீன் வீட்டிலும் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவருடைய செல்போனை கைப்பற்றிய அதிகாரிகள் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரும்படியும் அறிவுறுத்திச் சென்றனர்.

இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்தபோது முகமது சிராஜூதீன் செல்போனுக்கு இலங்கையில் இருந்து அழைப்பு வந்ததாகவும் அதன் அடிப்படையில் சோதனை மற்றும் விசாரணை நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News