செய்திகள்
போராட்டம் நடத்தும் டாக்டர்கள்

போராட்டம் நடத்தும் டாக்டர்கள் மீது நடவடிக்கை- சுகாதாரத்துறை எச்சரிக்கை

Published On 2019-10-30 09:55 GMT   |   Update On 2019-10-30 10:00 GMT
போராட்டம் நடத்தும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த 25-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டாக்டர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

டாக்டர்கள் வேலைக்கு வராததால், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரத்துக்கும் மேலான ஆபரேஷன்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

டாக்டர்களின் ‘ஸ்டிரைக்’ இன்று 6-வது நாளாக நீடிக்கும் நிலையில், போராட்டத்தை கைவிட்டு டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தொடர்ந்து கூறி வருகிறது.



இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், தொடர்ந்து 5 நாட்கள் பணிக்கு வராத டாக்டர்கள் மீது ‘பிரேக் இன் சர்வீஸ்’ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.  

இதையடுத்து பணிக்கு வராத டாக்டர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்கள் பணி மூப்பை இழப்பார்கள். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “அரசு டாக்டர்கள் நோயாளிகள் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும். போராட்டம் தொடர்ந்தால் மக்கள் நலனை பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். நியாயமான கோரிக்கைகளை அரசு பரீசிலிக்கும் என அறிவித்த பின்பும், போராட்டம் நடத்துவது நல்லதல்ல” என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News