செய்திகள்
கமல்ஹாசன்

கமல் பிறந்தநாள் விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்

Published On 2019-10-30 09:09 GMT   |   Update On 2019-10-30 09:09 GMT
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி வருகிற 9-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உங்கள் நான் என்ற பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.

அகில இந்திய அளவில் தேர்தல் வியூகத்துக்கு பெயர் பெற்றவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கவும் கடந்த மே மாதம் நடந்த ஆந்திர தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்கவும் திட்டமிட்டு கொடுத்தவர்.

தமிழகத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இவரை பயன்படுத்திக்கொள்ள முக்கிய கட்சிகள் அணுகின. கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரை அணுகினார். மற்ற கட்சிகளை புறக்கணித்துவிட்டு கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்து இருக்கிறார்.

தமிழகத்தில் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து முதல் கட்ட ஆலோசனைகளை பிரசாத் கிஷோர் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

கடந்த வாரம் கூட கமல் கட்சியில் புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

கமல்ஹாசன் நவம்பர் 7-ந்தேதி தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரும் விழாவுக்கு திட்டமிட்டுள்ளார். 7, 8, 9 என மூன்று நாட்கள் கமல் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

கமல் எப்போதுமே தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டார். அதற்கு காரணம் அவரின் தந்தை. கமல் தன் தந்தை ஸ்ரீநிவாசதேசிகன் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மேடைகளில் நிறையவே பேசியிருக்கிறார். தன் தந்தையே தனது கலையுலகுக்கு முன்மாதிரியாக இருந்தார் என்று கூறியிருக்கிறார்.

அவரது நினைவு நாள் தனது பிறந்தநாள் அன்று வருவதால் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்து விடுவார்.

இந்த ஆண்டு கமலின் சினிமா வாழ்க்கையில் 60-ம் ஆண்டு. எனவே அதையும் சேர்த்து கொண்டாட நிர்வாகிகளான நாங்கள் விருப்பப்பட்டோம். அப்போது கமல் சொன்ன யோசனை தான் தந்தைக்கு சிலையும் இளைஞர்களுக்கு பயிற்சி மையமும்.

பிறந்தநாள் அன்று 7ந்தேதி காலை தந்தைக்கு சொந்த ஊரான பரமக்குடியில் சிலை திறக்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்றைய தினமே பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதுபோன்ற மையங்கள் தமிழ்நாடு முழுக்க அமைக்கப்படலாம்.

இதன்மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் திறன் சார்ந்தும் உடல் சார்ந்தும் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த நாளான 8-ந்தேதி சென்னையில் தனியார் திரையரங்கில் காந்தியின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹேராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடக்க இருக்கிறது. இதில் கமல் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஹேராம் படக்குழுவினரும் கலந்துகொள்வார்கள்.

அடுத்த நாள் 9-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உங்கள் நான் என்ற பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட தமிழ், இந்தி, தெலுங்கு திரை பிரபலங்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

இதில் அரசியல் இருக்குமா என்பது சந்தேகம் தான். கமல் இந்த பிறந்தநாளை தந்தையின் நினைவுநாளாக தான் பார்க்கிறார். மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஏற்பாடு செய்தவை தான்.

பிறந்தநாள் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அவருக்கு சில கட்சி பணிகள் இருக்கின்றன. அவற்றையும் முடித்த பின்னர் ஜனவரி, பிப்ரவரியில் தான் பிரசாரம், சுற்றுப்பயணம் போன்றவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

கட்சி கட்டமைப்பில் நடக்கும் மாற்றங்கள் என்பது பணிகளை அனைவருக்கும் பிரித்து சமமாக வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் தான். இன்னும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

நவம்பர் இறுதிக்குள் அனைத்து பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டு விடும். அடுத்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம். மாற்றங்களை உருவாக்கக்கூடிய அதிகாரங்களை கைப்பற்றுவதே எங்களின் நோக்கம்.

அதற்கு உள்ளாட்சி தேர்தல் நல்ல தொடக்கமாக இருக்கும் என்பதால் கட்சி சார்பில் அதிக அளவில் இளைஞர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும்.

கல்லூரி மாணவர்கள் கூட நிறுத்தப்படலாம். இந்த உள்ளாட்சி தேர்தல் அடுத்து கமல் முதல்-அமைச்சர் ஆவதற்கான அடித்தளமாக அமையும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News