செய்திகள்
நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறுகிறது

நடுக்காட்டுப்பட்டியில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை- வானிலை ஆய்வு மையம்

Published On 2019-10-28 08:42 GMT   |   Update On 2019-10-28 08:42 GMT
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வரும் நடுக்காட்டு பட்டியில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 4வது நாளாக நீடிக்கிறது. இதற்காக ஆழ்துளை கிணற்றின் அருகில் மிகப்பெரிய ஆழ்துளை கிணறு தோண்டப்படுகிறது. ஆனால் கடினமான பாறைப் பகுதியாக இருப்பதால் இந்த பணி கடும் சவாலாக உள்ளது. மேலும், அங்கு விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மீட்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில், நடுக்காட்டுப்பட்டியில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், லேசான சாரல் மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கும். இதன் காரணமாக வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.



இன்று காலை 8 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஆகிய பகுதிகளில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், ராமேஸ்வரத்தில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது. 

கடுமையான காற்று வீசுவதால் தெற்கு கேரளா மற்றும் தென் தமிழக கடற்பகுதிகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags:    

Similar News