செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் திரண்டிருந்த பொதுமக்கள்.

வெளியூர் செல்ல 3-வது நாளாக ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

Published On 2019-10-26 08:32 GMT   |   Update On 2019-10-26 08:32 GMT
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர் செல்ல 3-வது நாளாக ரெயில், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை:

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர்.

சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பயணிகளும், நேற்று 2 லட்சத்து 82 ஆயிரம் பேரும் பயணம் செய்துள்ளனர்.

2 நாட்களில் 7,321 அரசு பஸ்கள் மூலம் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக விரிவான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் செய்துள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்தை பார்வையிட்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

எந்தெந்த பகுதிகளுக்கு மக்களின் தேவை இருக்கிறது என்பதை கண்காணித்து அதற்கேற்றவாறு கூடுதல் பஸ்களை இயக்க அவர் உத்தரவிட்டார்.

பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசாரையும் போக்குவரத்து துறை அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தி உள்ளார். மேலும் சென்னை- திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பஸ்கள் எவ்வித தாமதமின்றி செல்கின்ற வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களை விட இன்று பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடியவர்கள், சொந்த தொழில் செய்யக் கூடியவர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகளவு கடைசி நேர பணத்தை மேற்கொள்வார்கள் 1,510 சிறப்பு பேருந்துகள் உள்பட 3,735 பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. காலையில் இருந்து பஸ்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் புறப்பட்டு சென்றன. அதிகாலை வரை பயணிகளை ஏற்றி அனுப்பி வைக்க துறை அதிகாரிகள், பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அரசு பஸ்கள் தவிர ஆம்னி பஸ் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூடுதல் கட்டணம் வசூலித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்தனர்.

நேற்றைவிட இன்று கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்க ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் நீண்ட தூரம் செல்லக் கூடிய ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமாக இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களுடன் 7 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். குழந்தைகளுடன் குடும்பமாக ரெயிலில் பயணம் செய்ய வரிசையிலும் காத்து நின்றனர். இன்று பகல் நேர ரெயில்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. கோவை, பெங்களூர், மைசூர், மதுரை, திருச்சி போன்ற பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மக்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.

சென்னையில் இருந்து நேற்று அரசு பஸ், ஆம்னி பஸ் மற்றும் ரெயில்கள் மூலம் சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று அதைவிட கூடுதலாக பயணிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் ரெயில் நிலையம், சானிடோரியம், கே.கே.நகர் ஆகிய 6 பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நிலையங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பயணிகள் செல்ல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த போதிலும், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி பகுதியில் நெரிசல் காணப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
Tags:    

Similar News