செய்திகள்
ஈஷா நிறுவனர் சத்குரு

தமிழகம் முழுவதும் இலவச யோகா பயிற்சி- ஈஷா நிறுவனர் சத்குரு

Published On 2019-10-26 04:20 GMT   |   Update On 2019-10-26 04:20 GMT
தீபாவளி பரிசாக தமிழகம் முழுவதும் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று ஈஷா நிறுவனர் சத்குரு அறிவித்துள்ளார்.
சென்னை:

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

நமஸ்காரம், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி என்பது தீபத் திருவிழா, ஒளியின் சங்கமம். நிச்சயமாய் நம்மை சுற்றி ஒளி தேவைப்படுகிறது. ஏனெனில் நமது பார்வை எப்படி செயல்படுகிறது என்றால், ஒளியின் உதவி இல்லாமல் அதனால் ஏதும் செய்ய இயலாது. ஆனால் அனைத்திலும் முக்கியமானது உங்களுள் உள்ள ஒளி. ஒளி என்றால் தெளிவு.

நமது உடல், நமது மனம், நமது உயிர் போன்றவை பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும். நமது வாழ்க்கையின் நோக்கம் குறித்த தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் முன் உள்ள வி‌ஷயங்களை தெளிவாக பார்க்க இயலவில்லை என்றால் கண்ணால் பார்ப்பது மட்டுமல்ல, மற்ற ஒவ்வொரு வழிகளிலும் கூட நீங்கள் உங்கள் முன் உள்ள வாழ்க்கையை தெளிவுடன் உள்வாங்க முடியவில்லை என்றால், எளிய சூழ்நிலையும் கூட சிக்கலாக மாறிவிடும்.

தெளிவு நேரும் போது தான், நீங்கள் விடுதலை அடைகிறீர்கள், முழுமையான தெளிவு உங்களை அடையும்போது, உங்கள் விடுதலையும் முழுமையடைகிறது. தீபாவளி என்பது இதுதான்.

இந்த தீபாவளித் திருநாளன்று, நமக்குள் தெளிவையும் ஒளியையும் பெற வேண்டும் என்று, நமக்கு நாமே ஒரு உறுதி எடுத்துக் கொள்வோம். அந்த தெளிவை உங்களுக்கு உள்ளே நீங்கள் அடைவதற்கு, இந்த தீபாவளி நன்னாளை முன்னிட்டு, ஒரு அன்பளிப்பை உங்களுக்கு நான் வழங்க விரும்புகிறேன்.

ஈஷாவில் நடத்தப்படும் உயிர்நோக்கம் என்னும் வகுப்புக்கு, தீபாவளி அன்று மட்டும், எந்தக் கட்டணமும் இன்றி நீங்கள் பதிவு செய்ய முடியும். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு இது எனது தீபாவளி அன்பளிப்பு.

இந்த தீபாவளித் திருநாள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமையட்டும்! அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

இந்த உயிர்நோக்கம் யோகா வகுப்பில் இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள் அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 83000 83000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தோ அல்லது isha.sadhguru.org/uyirnokkam என்ற இணையதளத்தின் மூலமோ பதிவு செய்து கொள்ளலாம்.

அந்த மூன்று நாட்களில் பதிவு செய்பவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அந்தந்த ஊர்களிலேயே இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்படும். வகுப்பு நடக்கும் இடம் மற்றும் தேதி போன்ற விவரங்கள் தொலைபேசி அல்லது இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

இந்த யோகா வகுப்பு 3 நாட்கள் தினமும் 2 மணி நேரம் நடைபெறும். இதில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி, ஈஷா கிரியா ஆகிய பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படும்.

இப்பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் பல பயன்களை பெற முடியும். குறிப்பாக, உடல் ஆரோக்கியம் மேம்படும், மற்றவர்களுடனான உறவுகள் மேம்படும். மன அழுத்தம் நீங்கி ஆனந்தமாக வாழ முடியும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News