செய்திகள்
சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் சென்னை கோயம்பேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை: 5774 அரசு பஸ்களில் 2¾ லட்சம் பேர் பயணம்

Published On 2019-10-26 02:19 GMT   |   Update On 2019-10-26 02:51 GMT
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 2 லட்சத்து 78 ஆயிரத்து 152 பேர் 5 ஆயிரத்து 774 பஸ்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னை :

தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தினர் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரெயில் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தற்காலிக வெளியூர் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

24-ந்தேதி சென்னையில் இருந்து 2 ஆயிரத்து 968 பஸ்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 343 பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று இரவு 9 மணி வரையில் சென்னையில் இருந்து 2 ஆயிரத்து 806 பஸ்களில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 809 பேர் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 5 ஆயிரத்து 774 பஸ்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 152 பேர் பயணம் செய்துள்ளனர்.



சென்னையில் இருந்து இன்று 1,510 சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன. கோயம்பேட்டில் ஏற்கனவே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் வேளையில் சிறப்பு பஸ்கள் இயக்கத்தால் கோயம்பேடு பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வழக்கமாக செல்லக்கூடிய அரசு மற்றும் சிறப்பு பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் ‘ஆம்னி’ பஸ்களை நாடினர். இதனால் ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. இது தான் சந்தர்ப்பம் என்று ஒரு சில ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.

எனினும் பல பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில், வேறு வழியின்றி கூடுதல் கட்டணத்தில் பயணம் செய்தனர்.

பஸ் போக்குவரத்தை காட்டிலும் ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகளிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல பயணிகள் ரெயிலில் படிகட்டில் தொங்கியபடி அபாயகரமான முறையில் பயணம் செய்ததை காண முடிந்தது.
Tags:    

Similar News