செய்திகள்
கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார்

அன்னிய செலாவணி மோசடி - கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published On 2019-10-25 03:35 GMT   |   Update On 2019-10-25 03:35 GMT
அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை:

ஆந்திர மாநிலம் சித்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்கி சாமியார் ஆசிமரத்துக்கு சொந்தமான 40 இடங்களில் கடந்த 16-ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 400 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். 5 நாட்கள் நீடித்த சோதனையில், இந்த ஆசிரமம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது.

கணக்கில் வராத ரூ.44 கோடி இந்திய பணம், ரூ.20 கோடி வெளிநாட்டு பணம், ரூ.28 கோடி மதிப்பிலான 90 கிலோ தங்க நகைகள், ரூ.5 கோடி மதிப்பிலான வைர நகைகள் சிக்கியது.

சிங்கப்பூர், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹவாலா பணமாக ரூ.100 கோடி முதலீடு செய்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.



வரி ஏய்ப்பு மோசடி தொடர்பாக கல்கி சாமியார் விஜயகுமார், அவரது மனைவி பத்மாவதி, மகன் கிருஷ்ணா, அவரது மனைவி பிரித்தா ஆகியோரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாடு முதலீடுகள், ஹவாலா பணம், வெளிநாட்டு பணம் ஆகியவை குறித்து வருமான வரித்துறை சார்பில் அமலாக்கத்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் கல்கி சாமியார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது அன்னிய செலாவணி மோசடி, பெமா உள்ளிட்ட பிரிவு கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும், அவர்கள் பெயரில் உள்ள சட்டவிரோத சொத்துகள் முடக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News