செய்திகள்
டிடிவி தினகரன்

சசிகலா, அ.தி.மு.க.வில் சேரமாட்டார்- டிடிவி தினகரன்

Published On 2019-10-24 07:04 GMT   |   Update On 2019-10-24 07:04 GMT
சசிகலா அ.தி.மு.க.வில் எக்காரணத்தை கொண்டும் சேரமாட்டார் என்றும் இதுபோன்று பொய்யான தகவலை சிலர் பரப்புவதாகவும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
மன்னார்குடி:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ, மன்னார்குடியில், நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா அ.தி.மு.க.வில் எக்காரணத்தை கொண்டும் சேரமாட்டார். இதுபோன்று பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகிறார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள், நல்ல திட்டங்கள் எதுவும் செய்யவில்லை.

டெல்டா மாவட்டங்களில் ஆறு, குளங்களில் எல்லாம் தூர்வாரும் பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் கடலில் போய் கலந்துள்ளது. எனவே தூர்வாரும் பணியை முறையாக செய்ய வேண்டும்.

அ.ம.மு.க உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடும். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தியேட்டர்களில் நடிகர்களின் படங்களுக்கு சிறப்பு காட்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். இதில் எடப்பாடி அரசு, தலையிடுவது தேவையில்லாத ஒன்று. இது நடிகர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று தஞ்சை தொம்பன் குடிசையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


அ.தி.மு.க.வுடன் நாங்கள் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துரோகிகளிடம் ஒருபோதும் இணைய மாட்டோம்.

தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.முக முன்னிலை பெற்றுள்ளது. இது ஒன்றும் புதியதல்ல. அவர்கள் ஆளுங்கட்சி. பணபலத்தால் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். மக்கள் செல்வாக்கால் அல்ல.

கடந்த முறை தி.மு.க. ஆட்சி நடக்கும் போதும் கூட நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க தான் வெற்றி பெற்றது. ஆட்சி முடிந்த பிறகு அ.தி.மு.கவில் நிறைய பேர் காணாமல் போய் விடுவார்கள்.

சசிகலா உரிய நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வருவார். இப்போது வருவார், நாளைக்கு வருவார் என்ற யூகங்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News