செய்திகள்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தகவல்களை நம்ப வேண்டாம் - பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுரை

Published On 2019-10-24 03:29 GMT   |   Update On 2019-10-24 05:25 GMT
சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதையடுத்து பேரிடர் மேலாண்மைத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பட தொடங்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது மழை சீசனுக்கு ஏற்ப நிறைய ‘வெதர்மேன்கள்’ (வானிலை ஆர்வலர்கள்) வந்துவிட்டார்கள். எந்த வெதர்மேனுக்கும் அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்கவில்லை. அவர்கள் யூகத்தில் சொல்கிறார்கள். அது சில நேரங்களில் நடந்து விடுகிறது.



எனவே சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் வானிலை ஆய்வு மையம் சொல்கிற மழை செய்தியை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு, எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டுமே தவிர, யாரும் பீதி-அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.

பருவமழை காலத்தின்போது யாரும் நீர்நிலைகள் அருகே ‘செல்பி’ எடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வருவாய் நிர்வாக கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் டி.ஜெகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News