செய்திகள்
சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு துணை செவிலியர்கள் தர்ணா போராட்டம் நடத்திய காட்சி.

சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு துணை செவிலியர்கள் 2-வது நாளாக தர்ணா

Published On 2019-10-23 13:40 GMT   |   Update On 2019-10-23 13:40 GMT
சம்பளம் வழங்க கோரி சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு துணை செவிலியர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

சுகாதாரத்துறை கிராமப்புற துணை செவிலியர்கள் (ஏ.என்.எம்.) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 102 பேர் மத்திய அரசின் சி.எஸ்.எஸ்.எம். திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஓராண்டாக சம்பளம் தாமதமாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை. கடந்த ஆண்டு தீபாவளி போனஸ், டியூசன் கட்டணம் உள்ளிட்ட எவ்வித பலன்களும் தரவில்லை. 

சம்பளத்தை முதல் தேதியில் வழங்கக்கோரியும், தீபாவளி போனஸ் உள்ளிட்ட பண பலன்களை வழங்க கோரியும் துணை செவிலியர்கள் நேற்று சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து சங்க நிர்வாகிகளிடம் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோப்புகள் துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

ஆனால், இதனை துணை செவிலியர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 2-ம் நாளாக தர்ணா போராட்டம் தொடர்கிறது. ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து துணை செவிலியர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

Similar News